மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. முறையே 86.26%, 80.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக். 9) எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

50 வேட்பாளர்கள் போட்டி

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

எண்ணிக்கை நடைமுறை

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுராந்தகத்தில் 22 சுற்றுகளாகவும், தாராபுரத்தில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.