இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சுய பதிவு தொடக்கம்… குடும்ப விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை இணையதளம் வழியாக நேரடியாக பதிவு செய்யும் சுய விவர பதிவு (Self Enumeration) சேவை இன்று (ஜூலை 17) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை இணையதளம் வழியாக நேரடியாக பதிவு செய்யும் சுய விவர பதிவு (Self Enumeration) சேவை இன்று (ஜூலை 17) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த வசதியின் மூலம், கணக்கெடுப்பாளர் வீடு தேடி வருவதற்கு முன்பே குடும்பத் தகவல்களை மக்கள் தாங்களே பதிவு செய்ய முடியும். இதன் மூலம் கணக்கெடுப்பு பணிகளை வேகமாகவும், துல்லியமாகவும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய கணக்கெடுப்பு
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு கடைசியாக இந்தப் பணி நடைபெற்றது. 2021-ல் அடுத்த கட்ட கணக்கெடுப்பு நடைபெற வேண்டியிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதிய கட்டமாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏன் இந்தக் கணக்கெடுப்பு அவசியம்?
மக்கள் தொகை, குடும்ப அமைப்பு, வீட்டு வசதிகள், கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விவரங்கள் இந்தக் கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தகவல்களே அரசின் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, வள ஒதுக்கீடு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுவதற்கான முக்கிய ஆதாரமாக செயல்படுகின்றன.
சுய பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
சுய பதிவு செய்யும் குடும்பங்கள் சில வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி ஒரு மொபைல் எண் பயன்படுத்தப்பட வேண்டும்.
* குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவி மட்டுமே பதிவு மேற்கொள்ள வேண்டும்.
* பதிவு செய்யப்பட்ட பிறகு குடும்பத் தலைவரின் பெயரை மாற்ற இயலாது.
* ஒரே மொபைல் எண்ணை இரண்டு குடும்பங்களுக்குப் பயன்படுத்த அனுமதி இல்லை.
* மாநிலம், மாவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
* வரைபடத்தில் வீட்டின் சரியான இருப்பிடத்தை குறிப்பிட வேண்டும்.
* மொத்தம் 33 கேள்விகளுக்கான விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.
* இறுதியாக சமர்ப்பிக்கும் முன் அனைத்து தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து திருத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
பதிவு முடிந்த பிறகு என்ன கிடைக்கும்?
அனைத்து விவரங்களும் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன், H என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் 11 இலக்க Reference ID வழங்கப்படும். பின்னர் கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது இந்த அடையாள எண்ணை மட்டும் வழங்கினால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களை அவர் உறுதிப்படுத்திக் கொள்வார்.
டிஜிட்டல் முறையில் எளிதான சேவை
சுய விவர பதிவு வசதி பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் துல்லியமான தகவல்களை பதிவு செய்வது, எதிர்கால அரசுத் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை திட்டமிடுவதில் முக்கிய பங்காற்றும் என்பதால், அனைவரும் இந்த வசதியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
