காகிநாடா: அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் காகிநாடா பகுதியில் கனமழையும் பலத்த காற்றும் வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் தீவிரமடைந்து ஆந்திரக் கடற்கரையை நெருங்கிய நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழையும் சூறைக்காற்றும் ஏற்பட்டன. காகிநாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் மின்தடை
பலத்த காற்றால் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததைத் தொடர்ந்து, காகிநாடா மற்றும் அருகிலுள்ள சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விழுந்த மரங்களை அகற்றவும், சேதமடைந்த மின் இணைப்புகளைச் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
புயல் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கரையைக் கடந்துவரும் அர்னாப் புயல்
அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளுக்கு அருகே கரையைக் கடக்கும் நிலையில், பாபட்லா - விசாகப்பட்டினம் இடையிலான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வரை எட்டக்கூடும்; இடையிடையே 150 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

