மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தின்போது, புதிதாகப் பிறந்த 9 பச்சிளம் குழந்தைகளை பத்திரமாக மீட்ட செவிலியர்களின் துணிச்சலான செயல்பாடு சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சத்ரபதி சாம்பாஜிநகரின் ஆகாஷ்வானி பகுதியில் செயல்பட்டு வரும் ஆசியன் மருத்துவமனையின் பிரசவ வார்டில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதற்றமின்றி செயல்பட்ட செவிலியர்கள்
தீப்பற்றியதை அறிந்த மருத்துவமனை செவிலியர்கள் உடனடியாக செயல்பட்டு, பிரசவ வார்டில் இருந்த 9 பச்சிளம் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர். தீ பரவும் சூழ்நிலையிலும் அவர்கள் துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மருத்துவமனையின் ஐசியூ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்த 58 நோயாளிகளுக்கும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
3 தீயணைப்பு வாகனங்கள் விரைவு
தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
தீ மளமளவென பரவிய போதிலும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் எந்தவித உ**ழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் செவிலியர்களின் வீடியோ
தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றும் செவிலியர்களின் செயல்பாடுகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஆபத்தான சூழ்நிலையிலும் பதற்றமின்றி செயல்பட்டு 9 பிஞ்சு குழந்தைகள் மற்றும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த செவிலியர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
சம்பவத்தைத் தொடர்ந்து போலீசாரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெரும் ஆபத்து ஏற்பட்ட நிலையிலும் துரிதமாகச் செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய மருத்துவமனை செவிலியர்களின் செயல், மனிதநேயத்துக்கும் பணிப்பொறுப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

