மேகமலை விவகாரம்: வலுக்கும் மக்கள் போராட்டம்; உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்பார்ப்பு

மேகமலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது. உச்ச நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்து போராட்டம் தீவிரம்.

வருசநாடு: தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேகமலை வனப்பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி மலைவாழ் மக்கள் 3-வது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ள நிலையில், போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

98 வனக் கிராமங்களில் பல தலைமுறை மக்கள்

வருசநாடு அருகே தும்மக்குண்டு, காந்திகிராமம், வீருசின்னம்மாள்புரம், சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி உள்ளிட்ட சுமார் 98 வனக் கிராமங்களில் மலைவாழ் மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதிகள் புலிகள் காப்பகப் பகுதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனப்பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்ற வழியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

26-ம் தேதி தொடங்கிய தொடர் போராட்டம்

வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மலைக்கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த 26-ம் தேதி கடமலைக்குண்டுவில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இன்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், பல்வேறு தொழில் மற்றும் வணிக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டக் களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆதரவு

கடமலைக்குண்டு அனைத்து வியாபாரிகள் சங்கம், கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து மலைவாழ் மக்களின் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மலைவாழ் மக்கள் இரவு, பகல் பாராமல் போராட்டக் களத்திலேயே தங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

‘பல தலைமுறைகளாக இங்கே வசிக்கிறோம்’

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகையில், மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரி முதல் குஜராத் வரை நீண்டுள்ள நிலையில், தங்களை மட்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.

“பல தலைமுறைகளாக இந்த மலைப்பகுதியிலேயே வாழ்ந்து வருகிறோம். மரங்களைப் பாதுகாப்பதும், வனத்தைச் சார்ந்து வாழ்வதுமே எங்களது வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. எங்களது முன்னோர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளன” என அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தங்களது வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்து போராட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது. இதனால், நீதிமன்றத்தின் உத்தரவை மலைக்கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தங்களுக்கு சாதகமான உத்தரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

போராட்டத்தின் 4-வது நாளான நாளை அதிகளவில் மக்கள் பங்கேற்கும் வகையில் போராட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டியில் இருந்து போராட்டக் களம் அமைந்துள்ள பகுதிக்கு இருசக்கர வாகனப் பேரணியும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியாகும் உத்தரவின் அடிப்படையில், மேகமலை வனப்பகுதி மக்களின் போராட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.