உப்பு குறைப்பு இயக்கம் முதல் டெங்கு தடுப்பு ஆய்வு வரை: அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அறிவிப்புகள்

தமிழகத்தில் உப்பு பயன்பாட்டை குறைக்கும் மாநில அளவிலான இயக்கம் மற்றும் டெங்கு தடுப்புக்கான புதிய அறிவியல் ஆய்வுகளை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்தார்

சென்னை: தமிழக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், மாநில அளவில் உப்பு பயன்பாட்டை குறைக்கும் புதிய இயக்கம் மற்றும் டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய அறிவிப்புகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

நோய் வந்த பிறகு சிகிச்சை அல்ல; நோய் வராமல் தடுப்பதே நோக்கம்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், இதுவரை மருத்துவக் கட்டமைப்பு பெரும்பாலும் நோய் ஏற்பட்ட பிறகு அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையிலேயே செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

இதனை மாற்றி, நோய் வருவதற்கு முன்பே அதைத் தடுக்கும் வகையில் தனிநபர், குடும்பம் மற்றும் சமூக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக அவர் கூறினார்.

மாநில அளவில் உப்பு குறைப்பு இயக்கம்

மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் உப்பின் அளவை குறைக்கும் வகையில் தமிழகத்தில் மாநில அளவிலான புதிய இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் தமிழகத்தில் முக்கியமான பொது சுகாதார சவாலாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்ட இறப்புகளில் சுமார் 50 சதவீதம் இதயம் மற்றும் ரத்தக் குழாய் தொடர்பான நோய்களுடன் தொடர்புடையதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1.80 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு

தமிழகத்தில் தோராயமாக ஒரு கோடியே 80 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்துடன் வாழ்ந்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனம் ஒரு நபர் தினமும் 5 கிராமுக்கும் குறைவாக உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், தமிழகத்தில் சராசரியாக ஒருவரின் தினசரி உப்பு பயன்பாடு 7 முதல் 8 கிராம் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய உணவு முறையில் உட்கொள்ளப்படும் மொத்த உப்பில் பெரும்பகுதி வீட்டு சமையலில் சேர்க்கப்படும் உப்பிலிருந்தே கிடைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ஒரு கிராம் உப்பு குறைத்தாலும் பலன்

ஒருவரின் தினசரி உணவில் ஒரு கிராம் உப்பைக் குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதன் மூலம் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் 7 சதவீதமும், பக்கவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சோடியம் குறைவான மாற்று உப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு ஆய்வில், பக்கவாத பாதிப்பு மற்றும் மொத்த உயிரிழப்புகள் குறைந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள்

மாநில மக்களின் தற்போதைய உப்பு பயன்பாட்டின் அளவை கணக்கிடுவதற்காக சிறுநீர் மாதிரி அடிப்படையிலான மாநில அளவிலான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

அரசு நடத்தும் உணவகங்கள் மற்றும் சமையலறைகளில் உப்பு பயன்பாட்டை குறைக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். சோடியம் குறைவான மாற்று உப்பைப் பயன்படுத்துவதற்கான முன்னோட்ட திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் சமூக நலப் பணியாளர்கள் மூலம் உப்பு பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஊறுகாய், அப்பளம், கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவில் இருக்கும் மறைமுக உப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

டெங்கு தடுப்புக்கு புதிய அறிவியல் ஆய்வு

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தொடர்ந்து முக்கியமான பொது சுகாதார சவாலாக இருந்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டு தமிழகத்தில் 25,580 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். நடப்பு ஆண்டில் தற்போது வரை 14,581 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டெங்கு பரவலைத் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிய தமிழக சுகாதாரத் துறை முதல்முறையாக அறிவியல் அடிப்படையிலான கள ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

கடையநல்லூரில் கள ஆய்வு

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

உடலில் தடவும் கொசு விரட்டி, லெமன் யூகலிப்டஸ் எண்ணெய் உள்ளிட்ட இயற்கை கொசு விரட்டிகள் மற்றும் மின்சார கொசு விரட்டி சாதனங்கள் மூலம் ஏடிஸ் கொசுக்கடியிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் டெங்கு நோய் பரவலை சமூக அளவில் குறைக்க முடியுமா என்பதுடன், அவற்றின் பக்க விளைவுகள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்படும்.

2,880 வீடுகள் பங்கேற்பு

மூன்று குழும சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு ஆய்விலும் 48 குழுமங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுமத்திலும் 20 வீடுகள் இடம்பெறும்.

இதன் மூலம் மூன்று ஆய்வுகளிலும் சேர்த்து சுமார் 2,880 வீடுகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கொசு விரட்டியை கண்டறிதல், கொசு வலை மற்றும் உடலில் தடவும் கொசு விரட்டியை இணைத்து பயன்படுத்துவதன் பயனை மதிப்பிடுதல், வீட்டு மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் ஆகியவை இந்த முன்முயற்சிகளின் முக்கிய நோக்கங்களாகும்.

ரூ.43 லட்சத்தில் ஆய்வு

சுமார் ரூ.43 லட்சம் மதிப்பீட்டுச் செலவில் இந்த அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்களால் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் குறைந்த செலவிலான வீட்டு மட்ட கொசு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அறிவியல் ஆதாரங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு தடுப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்றும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டு கொசு பெருக்கத்தைத் தடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தினார்.