தேனி சிறையிலிருந்து தப்பிய 2 கைதிகளை சுட்டுப் பிடிக்க ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 15 பேர் பிடிபட்டனர். எஞ்சிய இரு கைதிகளை சுட்டுப் பிடிக்க தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

தேனி: தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளில் 15 பேர் பிடிபட்ட நிலையில், எஞ்சிய இருவரையும் சுட்டுப் பிடிக்க தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். தப்பிய கைதிகளைப் பிடிக்க தேனி மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

17 கைதிகள் தப்பியோட்டம்

கடந்த அக்டோபர் 26-ம் தேதி தேனி மாவட்டச் சிறையில் போலீஸாரைத் தாக்கிய 17 கைதிகள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, சிறை அருகே பிரவீன்குமார் முதலில் பிடிபட்டார். தொடர்ந்து சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், பிரசாந்த் என்ற லிங்க பிரசாத் உள்ளிட்ட கைதிகள் கைது செய்யப்பட்டனர்.

வனப்பகுதியில் பதுங்கியிருந்த கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக் ராஜா, சோலை முகிலேஸ்வரன் ஆகிய எட்டு பேரையும் ட்ரோன் உதவியுடன் போலீஸார் கண்டுபிடித்தனர்.

15 பேர் கைது

தொடர்ந்து மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பொன்முத்து, ரெஜின் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதன் மூலம் பிடிபட்ட கைதிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்ற கைதிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

பைக்கைப் பறித்துத் தப்பிய இருவர்

எஞ்சிய கைதிகளான திருப்பதியும் மீனாட்சி சுந்தரமும் சகோதரர்கள். மலைப்பகுதியில் போலீஸார் நெருங்கியதை அறிந்த இருவரும் வேறு வழியாக மலையடிவாரத்துக்குச் சென்றனர். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைத் தாக்கி, அவரது வாகனத்தைப் பறித்துக்கொண்டு தப்பினர்.

இதையடுத்து தேனி மாவட்ட எல்லைகளிலும் கானாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தப்பிய இருவரையும் பிடிக்க போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், எஞ்சிய இரு கைதிகளையும் சுட்டுப் பிடிக்க தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.