மும்பை: மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டேவின் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாராட்டி, பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் அவரை ‘ராக் ஸ்டார்’ என வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையராக பொறுப்பேற்ற பிறகு, உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வுகள் மற்றும் சோதனைகளை முண்டே தீவிரப்படுத்தியுள்ளார். விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், கெட்டுப்போன, காலாவதியான மற்றும் விதிமுறைகளுக்கு மாறான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பில் தீவிர நடவடிக்கை
உணவு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மகாராஷ்டிராவில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அதிகாரிகளின் ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நடவடிக்கைகள் தொடர்பாக முண்டேவுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அவரது ஆய்வுகள் மற்றும் சோதனைகள் ஊடகங்களில் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ராக் ஸ்டார்’ என வர்ணித்த நியூயார்க் டைம்ஸ்
இந்தச் சூழலில், துக்காராம் முண்டேவை மையமாகக் கொண்டு “In India, a food inspector is a rock star” என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “உணவருந்துபவர்கள் அவரைப் போற்றுகிறார்கள்; உரிமையாளர்கள் அவருக்கு அஞ்சுகிறார்கள்” என்ற கருத்தும் இடம்பெற்றுள்ளது. மேலும், அவரது உணவுப் பாதுகாப்பு ஆய்வுகள் அவரை பொது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், உணவு சுகாதாரம் குறித்த விவாதத்தை முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.
முண்டேவின் பதில் என்ன?
நியூயார்க் டைம்ஸ் செய்தி குறித்து சமூக வலைதளத்தில் பதிலளித்த துக்காராம் முண்டே, நல்லாட்சி என்பது தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவது அல்ல; அது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு என்பது மக்களைப் பாதுகாப்பதுடன், உணவின் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று குறிப்பிட்ட அவர், விதிமுறைகளை நியாயமாகப் பின்பற்றும் நிறுவனங்கள் நம்பகத்தன்மையைப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை செயல்படுகிறது என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாகி வருவதை நியூயார்க் டைம்ஸ் பதிவு செய்துள்ளதாகவும் முண்டே தெரிவித்துள்ளார்.





